சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு செல்போன் மூலம், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள் 2 பேரை பிடித்த சென்னை விமான நிலைய போலீசார், கடுமையாக எச்சரித்து அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு நேற்று பிற்பகல் ஒரு மர்ம தொலைப்பேசி நம்பரில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், சென்னை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அவைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, இன்னும் சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறும் என்று கூறி விட்டு, இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
இதையடுத்து பரபரப்படைந்த சென்னை விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில், மோப்ப நாய்களுடன் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், சென்னை விமான நிலையத்தில் உள்ள கழிவறைகள் மற்றும் உள்பகுதிகளில் ஆய்வு செய்தனர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய போலீசார் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து, இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணைக் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த எண் சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் காவல் நிலைய பகுதியில் இருந்து வந்துள்ளதும், பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் சேர்ந்து இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளதும் தெரிய வந்தது.
பின்னர், சென்னை விமான நிலைய தனிப்படை போலீசார், சேலையூர் பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவரையும், சேலையூர் அருகே அகரம் தென் பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிளஸ்-1 மாணவரையும் பிடித்து, அவர்களிடமிருந்து மிரட்டல் விடுக்க பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர். பின்னர், மாணவர்கள் இருவரையும் சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அப்போது நடத்திய விசாரணையில், மாணவர்கள் இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு, "ஜாலியாக தெரியாமல் செய்து விட்டோம். எங்களை மன்னித்து விடுங்கள்" என்று கெஞ்சியுள்ளனர். இதையடுத்து போலீசார் மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து, பின்பு மாணவர்களை கடுமையாக எச்சரித்ததோடு, அவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை கூறியுள்ளனர். அதன் பின்பு மாணவர்கள் இருவரிடமும் மன்னிப்பு கடிதங்கள் எழுதி வாங்கிக்கொண்டு, நேற்று இரவு அவர்களின் பெற்றோர்களுடன் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்