தஞ்சாவூர்: பேராவூரணியை அடுத்த பொன்னாங்கண்ணி காடு ஆனந்தவல்லி வாய்க்கால் தென்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (51). இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் சிவஜோதி(19) என்ற மகளும் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் புனல்வாசல் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன்(23) இவர் பேராவூரணியில் குடும்பத்துடன் தங்கி பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராகவும், லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் காளீஸ்வரனும் சிவஜோதியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் காளீஸ்வரன், சிவஜோதி வீட்டிற்குச் சகஜமாக சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஓராண்டுக்கு முன்பு பேராவூரணியை விட்டு காளீஸ்வரன் தனது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்ற நிலையில், காளீஸ்வரனும் சிவஜோதியும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காளீஸ்வரனுக்கு சொந்த ஊரில் வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர். தனது காதலனுக்கு திருமணம் ஆன தகவல் தெரிந்த நிலையில் சிவஜோதி இது தொடர்பாக செல்போன் மூலம் காளீஸ்வரனிடம் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்.20 அன்று இரவு பேராவூரணி வந்த காளீஸ்வரன் குடிபோதையில் சிவஜோதி வீட்டிற்குச் சென்று சிவஜோதியிடம் தகராறு செய்துள்ளார். தன்னுடன் குடும்பம் நடத்துமாறு அவர் காதலியை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது, அதற்கு திருமணம் ஆன உன்னுடன் வரமாட்டேன் என சிவஜோதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையே நடந்த தகராறு குறித்து சிவஜோதியின் பெற்றோர் பேராவூரணி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் காளீஸ்வரன் குடிபோதையில் இருந்த காரணத்தால் அவரை கண்டித்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் சிவஜோதி மற்றும் அவரது சகோதரர்கள் பெற்றோர் வீட்டில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது நேற்று அதிகாலை (பிப் 21) வீட்டின் கதவை தட்டி உள்ளே நுழைந்த காளீஸ்வரன் மீண்டும் சிவஜோதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் அங்கு இருந்த கல்லை எடுத்து சிவஜோதியின் தலையில் காளீஸ்வரன் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிவஜோதி உயிரிழந்தார். இதனையடுத்து காளீஸ்வரன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சிவஜோதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பேராவூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பிச் சென்ற காளீஸ்வரனை தேடி வருகின்றனர். காதலியின் தலையில் காதலன் கல்லை போட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: குடந்தையில் கமல்ஹாசன், சிவகார்த்திகேயனுக்கு எதிராக புகைப்படங்களை எரித்து ஆர்ப்பாட்டம்!