மதுரை: மதுரை அரசரடி அருகே எஸ்.எஸ்.காலனியில் வசித்து வருகிறார் மைதிலி ராஜலட்சுமி. இவரது மகன் தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் பள்ளிக்கு ஆட்டோவில் சென்ற மாணவனை ஆட்டோ டிரைவர் பால்பாண்டியுடன் மர்ம கும்பல் கடத்திச் சென்றது.
மேலும், அந்த கும்பல் மாணவனின் தாயார் மைதிலி ராஜலட்சுமியை தொடர்பு கொண்டு ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது. பணம் தர மறுத்ததால் சிறுவனை கொலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளனர். இதுகுறித்து மைதிலி எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் காசி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாணவனை கடத்திய கும்பல் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
பின்னர், போலீசார் கும்பல் இருக்கும் இடத்தை நெருங்கிய நிலையில், அக்கும்பல் நாகமலை - புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் மாணவன் மற்றும் ஆட்டோ டிரைவரை இறக்கிவிட்டு தப்பி ஓடியது. மாணவனை மீட்ட போலீசார், தொடர்ந்து கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவன் மர்ம கும்பலால் கடத்தப்பட்ட நிலையில், புகார் அளித்த மூன்று மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீசாருக்கு பாராட்டுக்கள் வெகுவாக குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: "முன்விரோத கொலைகளுக்கும் சட்டஒழுங்கிற்கும் சம்பந்தம் இல்லை" - துரைமுருகன் பேட்டி! - minister durai murugan