சென்னை: சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்லூரி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும், வெளியூரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அதிக அளவு பொத்தேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் விடுதிகள் மற்றும் தனியாக வீடு எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.
இவ்வாறு தனிமையில் இருக்கும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கல்லூரி மாணவர்களும் நீண்ட காலமாக போதைப் பொருட்களைப் பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்தது.
பலவகை போதைப் பொருட்கள் பறிமுதல்: இந்நிலையில், தாம்பரம் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பெயரில், கூடுதல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில், உதவி ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் 25க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில், 1,000க்கும் மேற்பட்ட போலீசார் திடீரென பொத்தேரியில் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனையில் பல்வேறு வகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி, போதை சாக்லேட்டுகள், பாங்கு, கஞ்சா ஆயில், போதை பெர்பியூம், போதைப் பொருட்களை பயன்படுத்த தேவையான கருவிகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக ஒரு மாணவி உட்பட 40 மாணவர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், யாரிடம் போதைப் பொருட்கள் வாங்குகிறார்கள்? போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் யார் யார்? மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் எப்படி கிடைக்கிறது? போதைப் பொருட்கள் எந்த நேரத்தில் கைமாற்றப்படுகிறது? என பலகோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
போதைப் பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் என்பதால், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் ஏற்பாடு செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் நலன் கருதி அவர்கள் மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படாது எனவும், இனி இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, போலீசார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, பொது இடத்தில் இரண்டு இளைஞர்கள் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்த இளைஞர்களை காவல் ஆய்வாளர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். பின்பு அனைவரையும் கண்டித்து உள்ளே அனுப்பினார்கள்.
குறிப்பாக, தனியார் விடுதியிலிருந்து வெளியே வரும் மாணவர்களே சோதனையில் ஈடுபட்ட பிறகு வெளியே அனுமதித்தனர். அதேபோல், பெண்களையும் தனி அறையில் வைத்து பெண் காவலர்கள் உதவியுடன் சோதனை செய்த பிறகே அவர்களை விடுதியிலிருந்து வெளியே அனுப்பப்பட்டனர். சென்னை புறநகர்ப் பகுதியில் காலை நேரத்தில் திடீரென ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்