சென்னை: சென்னையில் கடந்த மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இதுவரை 20க்கும் மேற்பட்ட நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர். விசாரணையில், இவர் சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரன் என்பவரின் மகன் என்பதும், ஆம்ஸ்ட்ராங் கொலையில் சதி திட்டம் தீட்டியதும், கொலையாளிகளுக்கு பண உதவி செய்ததும் தெரியவந்தது.
இதனிடையே, அஸ்வத்தாமனை காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என செம்பியம் தனிப்படை போலீசார் திட்டமிட்டு வந்ததாகக் கூறப்பட்டது. அதனை அடுத்து, அஸ்வத்தாமனை காலில் எடுத்து விசாரிக்க வேண்டி எழும்பூர் நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதேபோல் வேலூர் சிறையில் இருக்கும் ரவுடி நாகேந்திரவையும் காவலில் எடுத்து விசாரிக்க செம்பியம் போலீசார் திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே நிலப் பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் ஆம்ஸ்ட்ராங், அஸ்வத்தமனுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேறு யாராவது தொடர்பில் உள்ளார்களா, உண்மையாகவே இவர்களுக்கு இடையே நிலவிய பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்த, அஸ்வத்தாமனை காவலில் எடுக்க எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் தனிபடை போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும், அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரனையும் நாளை (புதன்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “ஆசிரியர்கள் எப்படி கத்தியை வைப்பார்கள்?”.. நாங்குநேரி விவகாரத்தில் கல்வி அதிகாரி திட்டவட்டம்!