சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனிடையே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 11 நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, கடந்த ஆண்டு நடந்த ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிதீர்க்க ஆம்ஸ்ட்ராங்கை படுகொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். அதன் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம், திருமலை, அருள் உள்ளிட்ட 11 பேரையும் செம்பியம் போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்ததை அடுத்து, அவற்றை பறிமுதல் செய்ய திருவேங்கடம் என்பவரை அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸ் பிடியிலிருந்து தப்பி போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படும் திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இதையடுத்து, மற்ற 10 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், நேற்றுடன் (செவ்வாய்க்கிழமை) போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த திருமலை, அருள் ஆகிய மூன்று பேரிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பெறுவதற்காக கூடுதலாக மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கடந்தாண்டு நடந்த ஆற்காடு சுரேஷின் கொலைக்காக பழிவாங்கும் நோக்கத்தில் தான் இந்த கொலை நடைபெற்றதா என்பது குறித்த ஆதாரங்களை திரட்ட மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு வருவதாகவும், இதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி படுகொலை.. சிறுவன் உட்பட 4 பேர் கைது.. விசாரணையில் அம்பலமான பின்னணி!