தஞ்சாவூர்: கும்பகோணம் பழைய பாலக்கரை காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் மாயமான நிலையில், கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை நீடூர் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் ரமேஷ் (51). வெல்டிங் வேலை செய்து வரும் இவர், கும்பகோணம் பழைய பாலக்கரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (அக்.06) மதியம் காவேரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக அவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மெரினா விமான சாகச நிகழ்ச்சியில் சோகம்: 4 பேர் மரணம்; 230-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் இது குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் நீரில் அடித்துச்செல்லப்பட்ட ரமேஷை தீவிரமாக தேடி வந்தனர். உறவினரது வீட்டிற்கு வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, நீரில் அடித்துச்செல்லப்பட்டவர் தேடி வந்த நிலையில் பல மணிநேர தேடுதலுக்கு பிறகு தீயணைப்புத் துறையினர் அவரை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்