சென்னை: சென்னை, போரூர் அடுத்த மாதா நகர் பகுதியில் நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் பெண்கள் சிலர் அங்கிருந்த ஒரு வீட்டு வாசல் முன்பாக அமர்ந்து பானிபூரி சாப்பிட்டுள்ளனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர், அந்த பெண்களை தகாத வார்த்தையில் பேசி திட்டியுள்ளார். தொடர்ந்து, தான் எடுத்து வந்த அரிசி மூட்டையை அங்கு அமர்ந்திருந்த ராதா என்ற பெண்ணின் மீது போட்டுள்ளார். பின்னர், வீட்டினுள் சென்று கட்டை ஒன்றை எடுத்து வந்து சரமாரியாக அந்த பெண்ணின் தலையில் தாக்கியுள்ளார். இதில், அந்தப் பெண்ணிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதையும் படிங்க: முதியவரிடம் பணம் கொள்ளை.. லஞ்சம் வாங்கிய SI பணியிட மாற்றம்..சென்னை குற்றச் செய்திகள்!
இதனையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தலையில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் எழுந்து உள்ள நிலையில், மாங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் என்பதால் வீட்டின் வாசலில் அமர்ந்ததற்கு கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்