சென்னை: தாம்பரம் அடுத்த இரும்புலியூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா(28). ஆட்டோ ஓட்டுநராக உள்ள இவர் மீது தாம்பரம் காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ சவாரிக்காக கார்த்திக் ராஜா காத்துக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் கார்த்திக் ராஜாவை ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதில், பலத்த காயமடைந்த கார்த்திக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தாம்பரம் துணை ஆணையர் பவன் குமார் தலைமையிலான போலீசார், கார்த்திக் ராஜாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொலைக்கான காரணம் என்ன? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல, குரோம்பேட்டை டி.எஸ்.லட்சுமணன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ்(50). இவர் சொந்தமாக லாரி ஒன்று வைத்து தோல் கழிவுகளை ஏற்றுச் செல்லும் தொழில் செய்து வந்துள்ளார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த சபரி என்பவருக்கு, தாமஸ் ரூ.30 ஆயிரம் கடனாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பணத்தைத் திருப்பிக் கேட்ட பொழுது சபரிக்கும், தாமஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, நேற்று இரவு பணம் தருவதாக சபரி, தாமஸை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதனை நம்பி தாமஸும், சபரி கூறிய இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, திருநீர்மலை கருமாரியம்மன் கோயில் அருகே சபரியும், அவருடன் இருந்த சில நபர்களும் தாமஸை ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது தலைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால், அதிகளவில் ரத்தம் வெளியேறி தாமஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அதனைக் கண்ட அப்பகுதியினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த குரோம்பேட்டை போலீசார் தாமஸின் உடலைக் கைப்பற்றி, பிரேத சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சபரியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தற்போது, தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரே இரவில் 2 கொலைகள் அரங்கேறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேசிய திறந்தநிலைப்பள்ளியின் படிப்புச்சான்று குறித்த அரசாணைக்கு இடைக்கால தடை