மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை செயலாளராக உள்ளவர் அகமது ஷாவலியுல்லாஹ். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை பூர்வீகமாக கொண்ட இவர் சென்னை மற்றும் வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்ட திமுகவில் அடியெடுத்து வைத்த சில மாதங்களிலேயே மாவட்ட திமுக சிறுபான்மை அணி துணை செயலாளர் பொறுப்பை பெற்றார். மேலும், பொதுமக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்கி குறுகிய காலத்தில் திமுகவினரிடையே கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்றார். மேலும், கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டினார்.
இவரது திடீர் வளர்ச்சி உள்ளூரில் பல ஆண்டுகளாக அரசியல் செய்து வரும் சிலருக்கு எரிச்சலையும் உண்டாக்கியது. இந்நிலையில், எம்.பி தேர்தலில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் அவர் அந்த போட்டியில் இருந்து விலகிக்கொண்டதுடன், காங்கிரஸ் வேட்பாளர் சுதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார்.
இந்நிலையில், கடந்த ஒன்றரை மாதத்தில் அகமது ஷாவலியுல்லாஹ்-வுக்கு தொடர்ந்து வாட்ஸ்-மூலம் இதுவரை 3 முறை மிரட்டல் வந்துள்ளது. கடைசியாக நேற்று வந்த வாய்ஸ் மெசேஜில், ''மயிலாடுதுறையில் உள்ள அகமது ஷாவலியுல்லாஹ் அலுவலகத்தில் ஜூலை 17-ஆம் தேதி பெட்ரோல் குண்டு வெடிக்கப்போவதாகவும், அதற்கு பிறகும் ஏரியாவில் அரசியல் செய்ய வந்தால் ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்ததை விட மோசமான சம்பவம் நடக்கும்'' என அந்த மெசேஜில் மர்ம நபர் கொலைமிரட்டல் விடுத்து ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதுகுறித்து, அகமது ஷாவலியுல்லாஹ் தரப்பினர் மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பான ஆடியோ வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் அமைச்சர் வீட்டின் அருகே நாதக நிர்வாகி படுகொலை!