சென்னை: சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 28 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் செம்பியம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்த நபர்களையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில், சென்னை ராஜரத்தினம் மைதானம் பகுதியில் உள்ள ரவுடிகள் ஒழிப்பு காவல்துறை பிரிவு அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வழக்கறிஞரும், விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகருமான பன்னீர்செல்வத்திடம் நேற்று இரவு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பிறகு வழக்கறிஞர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி போலீசார் அழைத்தனர். சம்மன் வழங்கியுள்ளனர். விசாரணைக்கு நேற்று நேரில் வந்த போது, அவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் கூறினேன். அதனை போலீசார் பதிவு செய்து கொண்டனர்.
மேலும், துணை காவல் ஆணையருக்கும், ஆணையருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாள் விசாரணைக்குப் பிறகு வெளியே அனுப்பினர். ஊடகத்தில் தவறான தகவல் பரப்பி வருகின்றனர். அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். 21ஆம் தேதி 2 மணிக்கு விசாரணைக்கு செல்வதற்கு முன்பாக டிஜிபி அலுவலகத்தில் ஒரு வழக்கு பதிவு செய்துவிட்டுச் சென்றேன். ஆனால் ஊடகத் தரப்பில் நான் காலையில் விசாரணைக்கு வந்ததாகவும், முக்கிய புள்ளி என்றும் தவறான தகவல்களை சித்தரித்துள்ளார்கள்.
ஆம்ஸ்ட்ராங்கை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரை தலைவருக்கு (திருமாவளவன்) சமமாக பார்க்கிறேன். ஊடகங்கள் இப்படி தவறான தகவல்களை பரப்பக்கூடாது. இன்றைய விசாரணையில் கேள்வி எதுவும் கேட்கவில்லை. 21ஆம் தேதி நடைபெற்ற 2 மணி நேர விசாரணையில் அனைத்திற்கும் பதில் கூறிவிட்டேன். நாங்கள் எந்தவித தவறுகளையும் செய்யவில்லை. தலைவர் (திருமாவளவன்) வழியிலும், அம்பேத்கர் வழியிலும் நடப்பவர்கள் நாங்கள்” என கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: வேலூர் அருகே சொத்து பிரச்சனையால் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது - murder