சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய குற்றம் சாட்டப்படும் நபராக, கொலையாளிகளை ஒருங்கிணைத்ததாக வழக்கறிஞர் ஹரிகரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது 5வது நாளாக இன்று ஹரிகரனிடம் விசாரணை தொடர்ந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்று மாலை விசாரணை முடிந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளார். இந்த நிலையில், பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில், "இவர் கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் உறவினர் எனக் கூறப்படுகிறது. இவரின் தந்தை திருநாவுக்கரசு சென்னை ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். பிரதீப் காவல்துறையில் ஊர்காவல் படையில் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டபோது அவரது இறுதிச்சடங்கு முழுவதும் பிரதீப் இருந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட திருமலை, அருள், பொன்னை பாலு ஆகிய 3 பேருடன் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பந்தமாக பேச்சு வார்த்தையில் பிரதீப் ஈடுபட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்காக அருள் தனியாக ஒரு செல்போனை வாங்கி பிரதீப்பிற்கு கொடுத்துள்ளதும், அந்த செல்போனில் மட்டும் பிரதீப், அருள், பொன்னை பாலு, திருமலை ஆகியோருடன் தொடர்ந்து பேசி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற நபர்களிடம் பேசும் போது தனது வழக்கமான செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இதன் மூலம் கொலையில் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக தனித்தனி செல்போன்களை பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று பிரதீப் ஆம்ஸ்ட்ராங் வீடு அருகே வந்து பார்த்துள்ளார். அப்போது, அவருடன் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது அண்ணன் என மிகவும் குறைவான ஆட்களே இருந்துள்ளனர். பொதுவாக எப்போதும் ஆம்ஸ்ட்ராங் இருக்கும் இடத்தைச் சுற்றி குறைந்தது 10 பேராவது இருப்பார்கள். ஆனால், தற்போது பெரம்பூரில் அவரது வீடு இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டுவதால் அதிக அளவில் ஆட்கள் இல்லை என்பதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கும்பல், சரியான முறையில் ரூட் எடுத்து சதி செய்து இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர்.
இதன் மூலம் சம்பவத்தன்று ஆம்ஸ்ட்ராங் சுற்றி ஆட்கள் மிகக் குறைவாக உள்ளனர் என முதலில் பிரதீப் தனது தனிப்பட்ட செல்போன் மூலம் வழக்கறிஞர் அருளுக்கு கூறியதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன்பிறகு அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில், மற்ற நபர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆம்ஸ்ட்ராங் கொலையை அரங்கேற்றி உள்ளனர். அவர்களுக்கு ரூட் கொடுத்துவிட்டு பிரதீப் அங்கிருந்துச் சென்று விட்டதாகவும்" கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் 2வது முறையாக அருளை காவலில் எடுத்து விசாரித்த போது வெளிவந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து, பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் அடுத்தடுத்து வெளியாகும் வாக்குமூலங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்