சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு உட்பட 11 நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆயுதங்களை பறிமுதல் செய்ய திருவேங்கடம் என்ற குற்றவாளியை அழைத்துச் சென்றபோது போலீசார் அவரை என்கவுண்டர் செய்தனர்.
யார் யார் உள்ளார்கள்? மேலும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆற்கார்டு சுரேஷின் கொலைக்கு பழி தீர்க்க இந்த கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர். ஆனாலும் போலீசார் இந்த கொலையின் பின்னணியில் யார் யார் உள்ளார்கள்? கூலிப்படையை ஏவி கொலை செய்தார்களா? பெரிய அளவில் பணம் கைமாற்றப்பட்டதா ஆகிய கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் என்பவரின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி அவர்களின் வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த போது, பெண் ஒருவர் வங்கி கணக்கில் இருந்து இவர்கள் 50 லட்ச ரூபாய் பரிவர்த்தனை செய்திருப்பது தெரிய வந்தது.
மேலும் மூவர் கைது: அதன் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் மனைவி வழக்கறிஞர் மலர்கொடி என்பவரையும் அவருக்கு உடைந்தையாக இருந்ததாக சதிஷ், ஹரிகரன் ஆகிய மூவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.
50 லட்சம்: இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது மூவரும் வெவ்வேறு அரசியல் கட்சியில் இருந்து வருவது தெரிந்தது. குறிப்பாக, வழக்கறிஞர் மலர்க்கொடி கொலையாளிகளுக்கு நாட்டு வெடிகுண்டு மற்றும் 50 லட்ச ரூபாய் பணம் அனுப்பியதை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளின் குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார்கள் பறிமுதல்: இதற்கிடையே, ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் வழக்கறிஞர் அருள் மற்றும் திருவள்ளுர் திமுக நிர்வாகியின் மகன் சதிஷ் ஆகியோரது பெயர்களில் வாங்கிய 3 கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள திருமலை என்பவரின் இரண்டு மகன்களையும் பிடித்து செம்பியம் தணிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் வங்கி பரிவர்த்தனைகள், அவர்களது தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் கிடைக்கும் தகவல்களை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/6gJvsAypyw
— AIADMK - Say No To Drugs & DMK (@AIADMKOfficial) July 18, 2024
இதனிடையே, திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழகக் இணைச் செயலாளர் உட்பட அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து மலர்கொடி சேகர் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'ப்ரொபஷனல் கில்லர்ஸ்'.. யார் இந்த கூலிப்படையினர்? எப்படி உருவாகிறார்கள்? விவரிக்கும் வழக்கறிஞர்!