திண்டுக்கல்: திண்டுக்கல் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் மாயாண்டி ஜோசப்(60). யாகப்பன்பட்டியில் பல ஆண்டுகளாக டாஸ்மார்க் கடை ஒன்றில் பார் நடத்தி வருகிறார். இவருக்கு நிர்மலா ஜோசப் என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. மேலும், நிர்மலா ஜோசப் முன்னாள் அடியனூத்து ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். பின்னர், உடல் நலக்குறைபாடு காரணமாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.
இவர்களது மூத்த மகளுக்கு திருமணமான நிலையில், மற்ற இருவரும் வெளியூரில் படித்து வருகின்றனர். மாயாண்டி ஜோசப் மட்டும் தனியாக வேடப்பட்டியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு 8.00 மணிக்கு மாயாண்டி ஜோசப், யாகப்பன்பட்டியில் உள்ள தனது பாரிலிருந்து இருசக்கர வாகனத்தில் வேடப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.
இதனிடையே, அப்பகுதியில் மறைந்திருந்த மர்ம கும்பலினர், அவ்வழியாக வந்த மாயாண்டி ஜோசப் மீது தங்களது வாகனத்தில் சென்று பயங்கரமாக மோதியுள்ளனர். இதனால், நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக ஜோசப்பை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜோசப்பின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இச்சம்பவம் முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பன பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாயாண்டி ஜோசப் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.