சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற தமிழ்நாடு அரசு பேருந்தில் கடந்த 21ஆம் தேதி பயணம் செய்த காவலர் ஆறுமுக பாண்டி என்பவரிடம் பேருந்து நடத்துநர் பயணச்சீட்டு எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த காவலர் அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவருக்கும் அரசுப் பேருந்தில் பயணம் செய்ய இலவசம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு மட்டும் இலவசமாக பணம் செய்ய அனுமதிப்பதை சுட்டிக்காட்டி நடத்துநரிடம் காவலர் ஆறுமுகப்பாண்டி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். மேலும், அந்த வீடியோ வைரலான நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பலரும் காவலரது செயலுக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர்.
மேலும், வாரண்ட் காப்பி (Warrant copy) இருந்தால் மட்டுமே காவலர்கள் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணம் செல்லலாம் என நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. வாரண்ட் இல்லாத பட்சத்தில், எந்த ஒரு காவலராக இருந்தாலும் அவர் கட்டாயம் டிக்கெட் எடுத்தே ஆக வேண்டும் என நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே காவலர் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்டுத்தீ போல் பரவியதைத் தொடர்ந்து, சென்னை பரங்கிமலை ஆயுதப்படை காவலராக பணியாற்றும் ஆறுமுகப்பாண்டி மீது துறை ரீதியாக விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து இன்று காவலர் ஆறுமுகப்பாண்டியிடம் காவல் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது, ஆறுமுக பாண்டி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து ஆறுமுகப்பாண்டியை சிகிச்சைக்காக எழும்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், தொடர்ந்து அவர் உளவியல் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.