சென்னை: போதை பொருட்களை விற்பனை செய்துவந்த தனியார் பொறியல் கல்லூரி மாணவர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரசின் போதையில்லா தமிழகம் வழிகாட்டுதலின்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் அவர்கள் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவலில் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தலை கண்டுப்பிடித்து தடுக்கும் வகையில் தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் V-3 ஜெ.ஜெ. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரி சாலை பகுதியில் ஜெ.ஜெ.நகர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த கார்த்திக்கேயன் (21) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடமிருந்து 17 LSD ஸ்டாம்புகள் மற்றும் 3 கிராம் ஒ.ஜி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கார்த்திக்கிடம் விசாரணை செய்ததில் அவர் கொடுத்த தகவலின் பேரில் அரவிந்த் பாலாஜி, (20) வத்சல் (21) ,ஆருணி(20) திரிசண் சம்பத் (20), ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 94 LSD ஸ்டாம்புகள். 48 MDMA மாத்திரைகள், 700 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செயலி ஒன்றின் மூலம் அறிமுகமாகி அதன் மூலம் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
குற்றம்சுமத்தப்பட்டவர்களை அரசு பொது மருத்துவமனையில் உள்ள மத்திய உயிர் வேதியியல் ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்ததில் கார்த்திக்கேயன், அரவிந்த் பாலாஜி, வத்சல், ஆருணி மற்றும் திரிசண் சம்பத் ஆகியோர் போதை பொருட்கள் பயன்படுத்திருந்தது அறிவியல் பூர்வமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளரின் உத்தரவின் பேரில் இந்த நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்