திருப்பூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா கூளநாயக்கன்பட்டியை அடுத்த பனைமரத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்புசாமி(38). இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) வீட்டில் தற்கொலைக்கு முயன்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கருப்புசாமி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்ட கோமங்கலம் போலீசார், தற்கொலை செய்து கொண்ட விஏஓ தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில், "என் சாவுக்கு காரணம் எனது கிராம உதவியாளர் சித்ரா மற்றும் மக்கள் மித்திரன் ஆசிரியர் என உலாவரும் மணியன் இருவருமே பொறுப்பு கடந்த ஒரு வருட காலம் கடும் இன்னல்கள் கொடுத்து இருந்தும், அதையும் தாண்டி என்னால் எனது பொதுமக்களுக்கு பல நன்மைகள் செய்து வந்தேன். இந்நிலையில், வேண்டுமென்றே தமிழ்நாடு முழுவதும் எனது மானத்திற்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவமானப்படுத்தி விட்டனர்.
இதனால் கடும் மன உளைச்சலுடன் கடந்த 7 மாதமாக போராடிப் பணி செய்த நிலையில், வேறு எங்கு பொது இடத்தில் சென்றாலும் இதே அவப்பெயருடன் சுற்றி வரும் சூழல், மனம் உளைச்சலாக இருந்தது. நான் உயிரினும் மேலாக விஏஓ பணி செய்ய விடாமல் தடுத்த சித்ரா மீது கோமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
எனது அருமை நண்பர்கள், அம்மா, அப்பா மற்றும் பெரிதும் நேசிக்கும் எனது புதுக்கோட்டை நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரை நான் துன்பத்தில் ஆழ்த்திவிட்டுச் செல்கிறேன். எனது மனம் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ளது, தமிழருக்கு மானம் தான் பெரிது என்ற நிலையுடன் உயிர் விடுகிறேன்" என எழுதியுள்ளார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, "தற்கொலை செய்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர், பணியில் நேர்மையைக் கடைப்பிடித்தவர். சில நாட்களுக்கு முன் அவரைப் பற்றி தவறான செய்தி வெளியானது. இதில் மனமுடைந்த நிலையில் இருந்த அவர், சக அலுவலர்களிடம் வேதனை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவிக்கின்றனர்.