தஞ்சாவூர் : கும்பகோணம் மாநகர் 10வது வட்டத்தில், தஞ்சை முக்கிய சாலை அருகே அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இங்கு, 32 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர். தலைமையாசிரியராக சரவணகுமாரி உள்ளார்.
இப்பள்ளி வளாகத்தில் இன்று காலை 10ம் வகுப்பறைகள் உள்ள கட்டிட வளாகத்தின் தாழ்வாரப்பகுதியில் உள்ள 5ம் எண் மற்றும் 4ம் எண் கொண்ட வகுப்பறைக்கு இடைப்பட்ட தாழ்வாரத்தில் பெரிய அளவில் ரத்தக்கறை காணப்பட்டது.
இதையும் படிங்க: RSS ஊர்வலம்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு! - RSS rally and procession case
மேலும், அங்கு பெண்கள் அணியும் கை வளையல்கள் உடைந்தும் கிடந்ததால், இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரத்த மாதிரிகளை கைப்பற்றி, உடைந்த வளையல் துண்டுகளையும் சேகரித்து சென்றுள்ளனர்.
என்ன சம்பவம் நடந்தது? எப்படி எதற்காக ஏன் நடந்தது என்ற விவரம் தெரியவில்லை. இப்பள்ளி வளாகத்திற்குள் வெளி நபர்கள் வராமல் தடுக்க சுற்றுச்சுவர் இல்லாததால், யாரேனும் பெண்களுடன் இங்கு வந்திருக்க கூடுமோ என்ற சந்தேகமும் எழுந்த நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருபாலர் படிக்கும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரத்தக்கறை மற்றும் கைவளையல்கள் உடைந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.