கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் இரு தினங்களில் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளன. இந்த நிலயில், கோவை மாவட்டம் சூலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அக்கட்சியினர் 300 பேர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் பாஜக மாநில தலைவரும், கோவை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை நேற்றிரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபட முயன்றதாகக் கூறி அவரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
அதனனத்தொடர்ந்து, அவரது பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி வந்து, காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தனது ஆதரவாளர்களுடன் த சாலை மறியலில் ஈடுபட்டார். இச்சம்பவம் தொடர்பாக மாநில துணை வணிக அலுவலர் சண்முகப்பிரியா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில், 143 மற்றும் 341 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை உட்பட 300 நபர்கள் மீது சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பாஜக தீபத்தில் அதிமுக இணையும்..பைனாகுலரிலும் கிடைக்காத தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி' - கே.பாலகிருஷ்ணன்
இந்நிலையில், இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "வாகனத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தும், அவர் தனது கட்சியின் தொண்டர்களை சந்திக்கச் சென்றதாக விளக்கம் அளித்து காவல்துறை அதிகாரி தடுத்து நிறுத்தினார்.
அவரது நடவடிக்கை தேர்தல் ஆணையம் வகுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு அப்பாற்பட்டது என அவரிடம் விளக்கிய போதிலும், அவர் எங்களை மாற்று வழியில் செல்லும்படி வற்புறுத்தினார்" என்று குறிப்பிட்டு காவல்துறை அதிகாரியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வீடியோவுடன் பதிவிட்டிருந்தார்.
இதேபோல், சில தினங்களுக்கு முன்பு சிங்காநல்லூர் அடுத்த ஒண்டிபுதூர் பகுதியிலும், இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொண்டதாக சிங்காநல்லூர் காவல் துறையினர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ''பாஜக ஆட்சிக்கு வந்தால் 75 ஆண்டு தமிழகத்தின் சுயமரியாதை, சமூக நீதி பின்னுக்குத் தள்ளப்படும்'' - கார்த்திக் சிதம்பரம் எச்சரிக்கை