தேனி: போடிநாயக்கனூர் அடுத்த மேலசொக்கநாதபுரம் பகுதியில் வசித்து வருபவர், பார்த்தசாரதி. ஆட்டு இறைச்சி கடை வைத்து தொழில் நடத்தி வரும் இவர், தனது சொந்த உபயோகத்திற்காக கேரளாவில் இருந்து ஆட்டோ ஒன்றை விலைக்கு வாங்கி வந்து பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி, தனது வீட்டிற்கு அருகே ஆட்டோவை நிறுத்தி வைத்து விட்டு, மறுநாள் காலை சென்று பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ இல்லாததைக் கண்டு அப்பகுதி முழுவதும் தேடியுள்ளார். எங்கு தேடியும் ஆட்டோ கிடைக்காததை அடுத்து, போடிநாயக்கனூர் ஊரக காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில், போடிநாயக்கனூர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு காவல் துறையினர், ஆட்டோவை திருடிச் சென்ற நபர்களை தேடி வந்துள்ளனர். இதனிடையே, அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் என்பவரும், தனது வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை காணவில்லை என இரண்டு நாட்களுக்கு முன்னர் புகார் அளித்துள்ளார்.
ஒரே பகுதியில் அடுத்தடுத்து இரண்டு ஆட்டோக்கள் திருடு போனதை அடுத்து, காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதில், போடிநாயக்கனூர் அடுத்த மீனாட்சிபுரத்தைச் சார்ந்த வசந்தகுமார், தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த சௌகத் அலி, தேனியைச் சேர்ந்த மாரிசாமி மற்றும் மணிகண்டன், ஆண்டிபட்டியைச் சேர்ந்த சண்முகராஜா ஆகிய 5 பேர் இப்பகுதிகளில் ஆட்டோ திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், திருடப்பட்ட ஆட்டோக்களில் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும், மற்றொரு ஆட்டோவை தஞ்சாவூரில் உள்ள சதீஷ் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
அதன் பின்னர் ஆட்டோ திருடிய நபர்களில் ஒருவரான மணிகண்டனை அழைத்துக் கொண்டு, தஞ்சாவூர் சென்ற காவல் துறையினர், அங்கு சதீஷிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருடப்பட்ட கேரள பதிவு எண் கொண்ட ஆட்டோவை, தமிழகத்தில் வாடகை ஆட்டோவாக இயக்குவதற்கு ஏற்ற வகையில், தமிழ்நாட்டு பதிவு எண்ணுடன் நிறம் மாற்றி பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
அதனை அடுத்து ஆட்டோவை கைப்பற்றி, சதீஷையும் கைது செய்து போடிநாயக்கனூர் ஊரக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆட்டோக்களை திருடி, வாகனத்தின் பதிவு எண்களை மாற்றி விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கோவையில் மூதாட்டியை தள்ளிவிட்டு அரிசி, புண்ணாக்கு சாப்பிட்ட யானை - வைரலாகும் வீடியோ!