சென்னை: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கிரிக்கெட் மைதானங்களில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றது. இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திலும், மைதானத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும், கள்ளச் சந்தையில் யாராவது டிக்கெட் விற்பனை செய்கிறார்களா என்றும் போலீசார் ரோந்துப் பணியில் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேரை கைது செய்து, அவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 56 டிக்கெட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட 12 பேரையும், திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணைக்கு பின்பு எழுதி வாங்கிக்கொண்டு காவல் ஜாமீனில் அனுப்பி வைத்தனர். மேலும், இதேபோன்று தொடர்ச்சியாக கள்ளச் சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த 20 நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டு சிறை! - Thoothukudi POCSO Case