சென்னை: நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுலைமான். இவர் கடந்த 3ஆம் தேதி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடந்த மாதம் 21ஆம் தேதி தனது குடும்பத்தாருடன் தனது சொந்த ஊரான ராமநாதபுரத்திற்கு சென்று விட்டு மூன்றாம் தேதி சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் வைக்கப்பட்டிருந்த 1.50 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம், வைரம், விலை உயர்ந்த கடிகாரங்கள் மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கம், 10 லட்சம் ரூபாய் வெளிநாட்டு கரன்சிகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் குற்றப் பிரிவு ஆய்வாளர் அந்தோணிராஜ் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு நேரடியாக சென்று சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும், கைரேகை நிபுணர்களை வரவேற்று ஆய்வு செய்தும், விசாரணை நடத்தி வந்தார். அப்போது போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சுலைமான் வீட்டின் கார் ஓட்டுநராகவும் காவலாளியாகவும் பணிபுரிந்து வந்த நேபாளத்தை சேர்ந்த சந்திர பரிவார் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தன்னுடன் அதே விட்டில் பணிபுரிந்த நேபாள நாட்டைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவரும் தங்களது கூட்டாளிகள் 4 பேர் என மொத்தம் ஆறு பேர் சேர்ந்து திட்டம் தீட்டி வீட்டில் ஆள் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்த பணம் நகைகள் வைரம் வெளிநாட்டு விலை உயர்ந்த கடிகாரங்கள் அனைத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கல்லூரி வருகைப் பதிவு வழக்கு: தேர்வெழுத அனுமதிப்பது முறையாக இருக்காது! நீதிமன்றம்.. - COLLEGE STUDENT ATTENDANCE CASE
தன் மீது சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதால் தான் மட்டும் இங்கே இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதே கும்பல் பெங்களூர், வட மாநிலங்களில் இதே பாணியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து நுங்கம்பாக்கம் காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் தப்பி சென்றுள்ள ஐந்து பேரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்டுள்ள வீட்டின் காவலாளி சந்திர பரிவார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.