திருப்பத்தூர்: ஆம்பூர் பி-கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் எழில்குமார்.டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டின் அருகே வேனை நிறுத்துவதற்கு இடம் இல்லாததால், கடந்த பல மாதங்களுக்கு முன்பாக, தனது நண்பரான நாச்சியார்குப்பம் பகுதியை சேர்ந்த, டிராவல்ஸ் நடத்தி வரும் சக்திவேலின் வீட்டின் அருகே நிறுத்தி வைத்துள்ளார்.
இதனையடுத்து, சக்திவேலின் வீட்டின் அருகே வேன் பல மாதங்களாக நின்று கொண்டிருந்துள்ளது. இதனால், எழில்குமார் இனி வரப்போவதில்லை என்று நினைத்து, சக்திவேல் எழில்குமாருக்கு சொந்தமான வேனை, சாத்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த அன்பரசன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து அன்பரசன் அந்த வேனை கதவாளம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இதனை தொடர்ந்து, அன்பரசனிடம் வேனை வாங்கிய சிலம்பரசன், அந்த வேனை திருப்பத்தூர் அடுத்த சலந்தம்பள்ளி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக எழில்குமார், சக்திவேலின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு அவரது வேன் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டனர். இதில், சக்திவேல் போலி ஆவணங்களை பயன்படுத்தி வேனை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சக்திவேல் மற்றும் அவரிடம் இருந்து வேனை வாங்கிய அன்பரசன், சிலம்பரசன், கார்த்திக், ஆகிய 4 பேரை ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் கைது செய்து ஆம்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பெண்களுக்கான விடுதலை வாக்கத்தான்.. மதுரையில் களைக்கட்டிய 78ஆவது சுதந்திர தினம் கொண்டாட்டம்..!