சென்னை: சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
இவ்வழக்கில் சமீபத்தில் கைதான ஹரிகரனை போலீசார் 5 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரிகரனிடம் நடத்திய விசாரணையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சம்போ செந்தில் ஆலோசனை கொடுத்து வந்ததாகவும், இன்ஸ்டாகிராம் அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட சம்போ செந்திலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் எந்தெந்த தொழிற்சாலைகள், தொழிலதிபர்கள், பைனான்சியர்களிடமிருந்து எந்தெந்த வகைகளில் சம்போ செந்திலுக்கு மாமூல் செல்கிறது என்ற விவரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
பணம் செல்வதை தவிர்த்துவிட்டால் ரவுடிகளின் ஆட்டம் அடங்கிவிடும் என்ற கோணத்தில் முதற்கட்டமாக பணம் செல்வதை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், சம்போ செந்திலின் கூட்டாளிகளான மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் ஒருவர் கொடுத்த தகவலில் தான் புது வண்ணாரப்பேட்டையில் மாமூல் வசூலித்ததாக சம்போ செந்தில் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “துணை முதலமைச்சர் பதவியை துரைமுருகனுக்கு வழங்கலாம்” - ஜெயக்குமார் பேச்சு! - ADMK ex minister jayakumar