சென்னை: அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) அருகே ஆட்டோ ஒன்று படுவேகமாக மின்னல் போல பாய்ந்து சென்று உள்ளது. மேலும் அந்த ஆட்டோ படங்களில் காட்டப்படும் சேஸ் சீன் போல வலது புறமும், இடது புறமும் சாய்ந்தபடி சென்றது. இந்த ஆட்டோவை கவனித்த சமூக ஆர்வலர் ஒருவர் அதனை வீடியோவாக பதிவு செய்து, அதனை எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில், உச்சக்கட்ட பாதுகாப்பு உள்ள சென்னை அண்ணா மேம்பாலத்தின் மீது போக்குவரத்து காவலர் உட்பட 5 பேர் மீது மோதுவது போல் மது போதையில் சென்ற ஆட்டோ டிரைவரின் உரிமத்தை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ரத்து செய்திட வேண்டும், என்றும் ஆட்டோ ஓட்டுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளார்.
அதோடு அந்த இடத்திலேயே ஒரு போக்குவரத்து காவலரிடம் நடவடிக்கை எடுக்கும் படி அவர் வலியுறுத்தியதாகவும், ஆனால் அந்த காவலர், ஆட்டோ ஓட்டுநர் இந்த பகுதியை சேர்ந்தவர் என்று கூறி, நடவடிக்கை எல்லாம் வேண்டாம் என கூறியதாவும் சமூக ஆர்வலர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ குறித்த பதிவு தற்போது வைரலானதை அடுத்து, அந்த ஆட்டோ ஓட்டுநரை பிடிக்க போலீசார், தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.3.3 கோடி மதிப்புடைய 5.5 கிலோ தங்கம் பறிமுதல்..!
முதற்கட்டமாக, சம்மந்தப்பட்ட ஆட்டோவுக்கு 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அதோடு அந்த ஆட்டோ ஓட்டுநர் போதை தலைக்கேறிய நிலையில் தான் ஆட்டோவை இப்படி செலுத்தியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பதிவில், “சமூக ஆர்வலரது தகவலின் பேரில் நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட வாகனத்தின் மீது 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்து விதி மீறல்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஓசி சிகரெட் தர மறுத்ததால் ஆத்திரம் - கடை உரிமையாளரை பட்டா கத்தியால் மிரட்டிய இளைஞர்கள்! சிசிடிவி வெளியீடு!