கோயம்புத்தூர்: ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீபால் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார் (வயது 27), கோயம்புத்தூர் மாவட்டம் தெப்பக்குளம் மைதானம் தியாகராய வீதியில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை (பிப்.3) தனது இரண்டாவது மகளான, 3 வயது இமன்ஷு வை ராஜவீதி சவுடம்மன் கோயில் பகுதியில் உள்ள இவரது உறவினரின் வாட்ச் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக, தண்ணீர் என நினைத்து அங்கு வைத்திருந்த வெள்ளை பெட்ரோலை (White Petrol) குடித்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தினேஷ் குமார், குழந்தையை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தினேஷ் குமார் உக்கடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் என நினைத்து வெள்ளை பெட்ரோல் குடித்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்ததாக புகார்.. அறிக்கை கொடுப்பதில் அரசு மருத்துவமனை அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு!