சென்னை: இந்தியா முழுவதும் நாளை (செப்டம்பர் 7) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. மக்கள் வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் விநாயகர் சிலையை வைத்து வழிபாடும் நிகழ்வுகளும் நடைபெறும். இந்நிலையில் பொது இடத்தில் வைக்கப்படும் சிலைகளுக்கு காவல்துறை தரப்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி ரசாயன கலவை இல்லாத சிலைகளை வைக்க வேண்டும். விநாயகர் சிலைகள் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மத ஸ்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலை வைக்கக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது.
இந்நிலையில், காவல்துறை விதித்திருக்கும் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் தெரிவிக்கும் வகையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் 1,519 சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னை பெருநகரில், விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், வழிபாடுகள் செய்வதற்கும் பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைப்பதற்கும் உயர்நீதிமன்றம், மாசுக் கட்டுப்பாடு வாரியம், தீயணைப்புத் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியினரின் தடையில்லா சான்றுகளுடன் காவல்துறை அறிவித்த கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலைகளை நிறுவ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் அருண் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு, அமைதியான முறையில் வழிபாடுகள் செய்ய காவல்த்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கும், ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளதன்பேரில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் 1519 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல்துறையினர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிசிடிவி. கேம்ராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், பொதுமக்கள் உரிய வழிகாட்டுதலுடன் வழிபாடுகளை மேற்கொள்ளவும் காவல்துறை சார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி குறித்த விழிப்புணர்வு; "தவறான சுற்றறிக்கை அனுப்பியோர் மீது நடவடிக்கை" - முதன்மைச் செயலாளர் எச்சரிக்கை!