சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திமிரி எனும் ஊரில் வசிக்கும் கவிஞர் மணிஎழிலன் என்பவர், மலர்க்கண்ணன் பதிப்பகத்தின் பதிப்பாசிரியராக இருந்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர், தனது தன்னம்பிக்கையால் பதிப்புலகில் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை, நீலாங்கரையில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் கடலுக்கு அடியில், ஸ்கூபா டைவிங் மூலம் 60 அடி ஆழத்தில் (18 மீட்டர்) சென்று, ஒரு சினிமாவுக்கான கதைச் சுருக்கத்தை எழுதியுள்ளார். அதனை, உடனே தட்டச்சு செய்து புத்தகமாக்கி, ஆழ்கடலிலே வெளியிட்டு சாதனை படைத்துள்ளார். இதுவரை ஸ்கூபா டைவிங்கிலும், பதிப்புலகிலும், எழுத்துலகிலும் இது போன்ற சாதனையை எவரும் செய்ததில்லை என கூறப்படுகிறது. இதனை Assist World Records என்ற நிறுவனம் உறுதி செய்து சான்றிதழினை வழங்கியுள்ளது.
இது குறித்து பேசிய கவிஞர் மணிஎழிலன், “ஒவ்வொரு ஆண்டும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி, புயல் மையம் கொண்டிருப்பதாக தகவல் வரும். சென்னை, ஆந்திரா, புதுச்சேரியையும் கடந்து மிகப்பெரிய சேதத்தை உருவாக்கிய பின், அந்த இடத்தில் மிகப்பெரிய மாற்றம் அடைந்து அமைதி உண்டாகும்.
இதுபோல், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் எனும் புயல் தமிழ்நாட்டில் மையம் கொண்டு, பல்வேறு மாற்றங்களைச் செய்துவிட்டு போகும். அப்படியொரு தேர்தலை மையப்படுத்தி “மையம்” எனும் தலைப்பில் திரைப்படத்திற்கான கதையை எழுதியுள்ளேன்.
இந்தக் கதை, திரைப்பட உலகில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறக்கூடிய படமாக அமையும். இதுபோல் ஒரு தேர்தலை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடத்தினால் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தக் கதை விரைவில் திரைப்படமாக வெளிவரும். இதற்கு முழு உறுதுணையாக இருந்து அரவிந்த் தருண் ஸ்ரீ ஸ்கூபா டைவிங் பயிற்சி அளித்தார்” எனக் கூறியுள்ளார்.
மேலும், கவிஞர் மணிஎழிலன் கடலுக்கு அடியில் சென்று 30,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை எடுத்துள்ளார். கவிஞர் க.மணிஎழிலனின் இந்த சாதனையை அனைத்து காதலர்களுக்கும், அவரது மனைவி அமுதா மணிஎழிலனுக்கும், அவரது மகள்கள் மைத்ரா, பவித்ராஸ்ரீ ஆகியோருக்கும் சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கு விசாரணை தேதி மாற்றம் - சென்னை உயர்நீதிமன்றம்..