சேலம்: சேலம் களரம்பட்டி பகுதியில் வேலு என்ற நபர் ரேசன் அரிசி கடத்தல், கஞ்சா விற்பனை என பல்வேறு விதமான சட்ட விரோத செயல்களை செய்து வருவதாக, அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, கடந்த வாரம் வேலு அடியாட்களை அழைத்து வந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தவர்களின் வீட்டுக்குச் சென்று சரமாரியாக அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விட்டுச் சென்று உள்ளார். அந்த தாக்குதலில் 14 வயது சிறுவன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் களரம்பட்டியைச் சேர்ந்த பாமக இளைஞர் சங்கச் செயலாளர் சரவணன் புகார் தெரிவித்தார். ஆனால், கிச்சிப்பாளையம் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், பாமக மாநகர் மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம் தலைமையில், பாமக துணைச் செயலாளர் வழக்கறிஞர் குமார், பகுதிச் செயலாளர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், "சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வேலு உள்ளிட்ட கும்பலுடன் கிச்சிபாளையம் காவல் நிலைய போலீசார் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, மோதல் சம்பவத்தின் போது தொடர்பில்லாத பாமக இளைஞர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் மீதும் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்ட விரோத கும்பலுக்கு துணை போகும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய் வழக்கினை ரத்து செய்து குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். களரம்பட்டி பகுதியில் ரவுடிகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் தினந்தோறும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும், இதனை தடுக்க தவறினால் பாமக சார்பில் எம்எல்ஏக்களை அழைத்து வந்து மாபெரும் கண்டன போராட்டம் நடைபெறும்" என்றும் தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்