சேலம்: நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைக்காக நாடு முழுவதும், குறிப்பாக தென்னிந்தியாவிற்கு நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக, தமிழகத்தில் திருப்பூர், சென்னை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நேற்று தமிழகம் வந்த மோடி, கோவையில் நடந்த பிரம்மாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார். அப்போது, சாலையின் இருபுறத்தில் இருந்த பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவையில் வாகன பேரணியை முடித்துவிட்டு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சுமார் 11 மணியளவில் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சேலம் வருகைத் தரவிருக்கிறார்.
மதியம் 1 மணிக்கு கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடக்கும் சேலம், நாமக்கல், கரூர், நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருக்கு வாக்கு சேகரித்து பேசவிருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்திற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடைக்கு பின்புறம் ஹெலிகாப்டர் தரையிறங்க பிரேத்யேக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து, விழா மேடைக்குச் செல்ல தனி சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க பாஜகவின் மூன்று மாவட்ட நிர்வாகிகளும் தயார் நிலையில் உள்ளனர். மேலும், இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயக கட்சி(IJK) நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக, பாமக-பாஜக இடையிலான கூட்டணி இன்று காலை 8 மணிக்கு கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
சுமார் 44 ஏக்கரில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மைதானம் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக டிஜிபி, 4 டிஐஜி உட்பட மூவாயிரத்திற்கும் அதிகமான போலீசார் 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்க வரும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப் படுகின்றனர். முன்னதாக பிரதமரின் தனி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே சேலம் வருகைத் தந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் இணைந்த பாமக.. எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு?