கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை சாலை நான்கு ரோடு சந்திப்பு பகுதியில். பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, பாஜகவின் கோயம்புத்தூர் வேட்பாளர் அண்ணாமலை, நீலகிரி வேட்பாளர் எல்.முருகன், பொள்ளாச்சி வேட்பாளர் வசந்தராஜன், திருப்பூர் வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "நீலகிரி என்பது தேயிலைக்கு மிகவும் பிரபலமான பகுதியாகும். ஒரு தேநீர் வியாபாரியாக இந்த பகுதிக்கு வருவதில் எனக்கு மகிழ்ச்சி இருக்காதா? இந்த நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நலமும், முன்னேற்றமும் அடைய வாழ்த்துகிறேன்.
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாஜகவிற்கு ஆதரவு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. திமுக ஆட்சிக்கு முடிவுகட்டி வீட்டிற்கு அனுப்ப, தேசிய ஜனநாயகக் கூட்டணியால் தான் முடியும் என ஒட்டுமொத்த தமிழ்நாடும் கூறுகிறது. எனவேதான், மீண்டும் மோடி வேண்டும் என்கிற முழக்கம் தமிழ்நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.
சாதாரண மனிதர்கள் அதிகாரத்திற்கு வருவதை திமுகவும், காங்கிரஸும் விரும்புவதில்லை. அவர்களது வாரிசுதான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அதுவே, பாஜக பட்டியலினப் பெண் ஒருவரை இந்தியாவின் ஜனாதிபதியாக ஆக்கி பெருமிதம் சேர்த்தது. அதற்குக் கூட திமுக ஆதரவளிக்கவில்லை.
எந்த மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், மத்திய அரசு அதன் மேம்பாட்டுக்காகச் செயல்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி தான் ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி என நாங்கள் நம்புகிறோம். எனவே, அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியும் அவசியமாகிறது.
வளர்ச்சிக்கான அரசியலாக இல்லாமல், திமுக எப்போதும் வெறுப்பு அரசியலைத்தான் செய்து வருகிறது. சுரண்டல், ஊழல் என்பதற்கு மற்றொரு பெயர் திமுக. இப்போது நாம் 5G பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், 2ஜி ஊழல் செய்தவர்கள் திமுக. ஊழல்வாதிகளை நாம் தண்டிக்கின்றோம், ஆனால் அவர்கள் பாதுகாக்கின்றனர்.
சமீபத்தில் பாஜக கச்சத்தீவு விவகாரத்தைக் கையில் எடுத்து, கச்சத்தீவினை எப்படி மற்றொரு நாட்டிற்கு வழங்கினார்கள் என்ற அரசு ஆவணங்களை வெளியிட்டோம். இவர்களின் துரோகம் குறித்து மக்களுக்கு தற்போது தெரிந்துள்ளது. இவர்களின் துரோகத்தால் தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டு பெரிதும் பாதிப்படைந்தனர். இதற்கு தமிழ்நாட்டு மக்கள் இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இந்த தேர்தலில் மோடியை நாட்டில் இருந்து அனுப்ப வேண்டும் என திமுகவினர் கூறுகின்றனர். அவர்களுக்கு எனது பதில், இந்த தேர்தலில் ஊழலும், வாரிசு அரசியலும், போதை கலாச்சாரமும், தேசியத்திற்கு எதிரான கொள்கை போக்கும் நாட்டில் இருந்து வெளியே அனுப்பப்படும் என்பதுதான்.
தமிழ்நாட்டு மக்கள் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி பாஜக வேட்பாளர்களின் வெற்றியானது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான புதிய வழியைத் திறந்து வைக்கும் என்பது தான் மோடியின் உத்தரவாதம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேலம் பாஜக தலைவர் சுரேஷ்பாபு வீட்டில் வருமான வரித்துறை சோதனை!