திருச்சி: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு விழா நாளை மறுநாள் (ஜன.22) நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, பிரதமர் மோடி 11 நாட்கள் விரதம் மேற்கொண்டு, இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.
அந்த வகையில், அவர் இன்று (ஜன.20) திருச்சி அடுத்த ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ரங்கநாதன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ளார். முன்னதாக, நேற்று (ஜன.19) சென்னையில் தேசிய அளவிலான 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காலை 10.20 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகிறார்.
அதன் பின்னர், திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 10.45 மணி அளவில் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே, கொள்ளிட கரை பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து 11.05 மணி அளவில், கார் மூலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் செல்கிறார்.
கோயிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, ரங்கநாத சாமியை தரிசிக்கும் பிரதமர் மோடி, கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, கோயிலில் உள்ள மண்டபத்தில் தமிழறிஞர்கள் பாட உள்ள கம்பராமாயணத்தைக் கேட்கிறார். மேலும், அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
அதன் பின்னர், பகல் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சக்கரை சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் செல்கிறார். பின்னர் தனி விமானம் மூலம் அவர் மதுரைக்கு புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு கருதி இன்று பிற்பகல் வரை பொது தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக காவல் துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் பிரதமராக ஒருவர் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருகை புரிவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேலோ இந்தியா 2023; சென்னை வந்தார் பிரதமர் மோடி!