திருநெல்வேலி: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக தென் தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கிகளைப் பெற முயற்சித்து வருகிறது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.15) எட்டாவது முறையாகத் தமிழகம் வருகை தந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர் பட்டி என்ற பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். இந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது தமிழர்கள் கலாச்சாரம், பண்பாடு பற்றிப் பேசினார். மேலும், தமிழ் மொழி குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
பிரதமர் பேசிக் கொண்டிருக்கும் போது மேடையின் எதிரில் திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரத்தைச் சேர்ந்த யுகேஜி படிக்கும் நான்கு வயது சிறுமி அபிக்சனா பாரத மாதா வேடமணிந்து கையில் தேசியக் கொடியுடன் பிரதமர் மோடியைப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார். இதைக் கவனித்த பிரதமர் மோடி இங்கு ஒரு குழந்தை பாரத மாதா வேடம் அணிந்து வந்துள்ளது.
அந்த அளவுக்குத் தமிழக மக்கள் பாஜகவை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர் எனப் பெருமையோடு பேசினார். இது கூட்டத்திற்கு வந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பெரும் கூட்டத்திற்கு இடையே சிறுமி அணிந்திருந்த பாரத மாதா வேடத்தைச் சுட்டிக்காட்டி பிரதமர் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதையும் படிங்க: "தேர்தல் பத்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம்.. அனைவரும் வருந்துவர்" - பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024