சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கண்ணன் சுவாமிநாதன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறையில் நடைபெறும் ஊழல் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் குடிநீர் வழங்குவதற்கான டெண்டரை மத்திய அரசின் ஜல் ஜீவன் வழிகாட்டுதல்கள் படி முறையாக வழங்கவில்லை. குடிநீர் இணைப்புகளில் கழிவு நீர் கலந்து வருகிறது என கூறினார்.
குடிநீர் வழங்கல் துறை தரப்பில், மனுதாரருக்கு டெண்டர் வழங்கவில்லை என்பதால் தவறான குற்றச்சாட்டை முன்வைப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் விசாரணைக்கு இடையூறு செய்யும் வகையில் குரல் எழுப்பப்பட்டது. நீதிபதிகள் அறிவுறுத்தியும் கேட்காமல் நீதிமன்ற மாண்புக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், இந்த தொகையை சட்டப்பணிகள் ஆணையத்துக்கு வழங்கவும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: 'கூட்டிட்டு போகாதீங்கன்னு சொன்னோமே'.. சிறையில் விசாரணை கைதி மரணம்; விழுப்புரத்தில் பரபரப்பு..!