திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த வக்கனம்பட்டி பகுதியை சேர்ந்த புனிதா (34). இவருக்கும் வாணியம்பாடி அடுத்த புதூர் அண்ணாநகர் 5வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்த பொன்னப்பன் (38) என்பவருக்கும் திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் "விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது" என புனிதா தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஒரு வருடமாக கணவனைப் பிரிந்து ஜோலார்பேட்டையில் உள்ள தன்னுடைய தாய் அலமேலுவுடன் அவர் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விவாகரத்து வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் அருகே வழிமறித்த அவரது கணவர் பொன்னப்பன், கத்தியால் புனிதாவின் காதை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் படுகாயமடைந்த புனிதா திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரித்துவிட்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இடம் புனிதா மற்றும் அவரது குடும்பத்தினர் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் கணவர் தன்னை மீண்டும் தாக்கக்கூடிய சூழ்நிலை உள்ளதாகவும், இதனால் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: செக்யூரிட்டி ட்ரெஸ் வாங்கச் சென்ற நபருடன் பழக்கம்.. கணவனைக் கொன்ற மனைவி.. திருப்பூரில் நடந்தது என்ன?