மதுரை: தஞ்சை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த கலா செல்வம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'நாங்கள் திருபுவனம் பேரூராட்சியில் குடியிருந்து வருகிறோம். எங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வசித்து வருகின்றன. அதிகமானோர் குடியிருப்பு பகுதியில் திருபுவனம் பேரூராட்சி கழிவுநீர் வெளியேற்றுவதற்கான அடிப்படை வசதிகளை முறையாக செய்து தரவில்லை.
மேலும் இந்த பகுதியில் விவசாய பகுதியாக உள்ளதால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கனிவாய்க்கால் வழியாக வருகிறது. இதில் இந்த பகுதியின் மழைநீர் சேர்ந்து வருகிறது இதனால் இந்த வாய்க்கால் நீர் பெரும்பாலும் விவசாயத்திற்கு பயன்பட்டு வருகிறது. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் கழிவுநீர் வாய்க்காலை முறையாக பராமரிக்காமல் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கனிவாய்க்காலில் இணைக்கப்பட்டு வருகிறது.
இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் வீட்டுக் கழிவுநீர் கலப்பதால் வாய்க்கால் முழுவதும் சகதிகள் சேர்ந்து துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடும் உருவாகியுள்ளது. இதுகுறித்து இந்த பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக மனு அளித்து காத்திருந்தோம் ஆனால் பேரூராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையும் படிங்க: நகர் மன்றத் தலைவர் மிரட்டல் வழக்கு: அதிமுக கவுன்சிலர்கள் 8 பேருக்கு முன் ஜாமீன் வழங்கிய நீதிபதி!
தற்போது மழைக் காலம் தொடங்கியுள்ள சூழலில் வாய்க்காலில் கழிவுநீர் கலந்து வருவதால் நீரினை விவசாயத்திற்கும் பயன்படுத்த முடியாமல் சுகாதார சீர்கேட்டிற்கு இந்த பகுதி மக்கள் உள்ளாகி உள்ளனர். எனவே விவசாய வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கௌரி முன் விசாரணைக்கு வந்தது. மனுவினை விசாரணை செய்த நீதிபதி, "விவசாயத்திற்கு பயன்படும் வாய்க்கால் தண்ணீரில் வீட்டு கழிவுநீர் கலக்காமல் தடுப்பது குறித்து திருபுவனம் பேரூராட்சி நிர்வாகம் தஞ்சை மாவட்ட பொதுப்பணி துறையினருடன் இணைந்து ஆறு வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்