கோயம்புத்தூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது அவர் பேசும் பல்வேறு கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் முதன்மை உரிமை சிறுபான்மையருக்குத்தான் உள்ளது என்று சொன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி திரித்து மதவெறுப்பு பிரச்சாரத்தைச் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர் இந்திய ஒற்றுமை இயக்கத்தினர்.
மேலும், இது போன்ற பேச்சுக்கள் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும், சமூகத்தில் மத மோதலை தூண்டுவதாகவும் மற்றும் அமைதியை சீர்குலைப்பதாகவும் கூறி, தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும்.
இதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடியை தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்தனர். இந்த மனுவை, இந்திய ஒற்றுமை இயக்கத்தின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நேருதாஸ், பேராசிரியர் காமராஜ், டாக்டர் டென்னிஸ் கோவில்பிள்ளை ஆகியோர் வழங்கினர்.
இது குறித்து டாக்டர் டென்னிஸ் கோவில்பிள்ளை கூறுகையில், "கடந்த பத்து ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் உச்சக்கட்டமாக வடமாநிலங்களில் நடக்கக்கூடிய தேர்தல் பிரச்சாரங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்மத்தை உமிழ்ந்திருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக பிரதமர் மோடி, இந்து மக்களின் சொத்துக்களைப் பறித்து சிறுபான்மையருக்கு கொடுக்கப்போவதாக காங்கிரஸ் கட்சியினர் பேசியதாகக் கூறி திரித்துப் பேசியுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமல்லாது ,தேர்தல் ஆணையம் என்பது அனைவருக்கும் பொதுவானது, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை அதற்கு இருக்கிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இவற்றையெல்லாம் மௌனப் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருக்கிறது.
மேலும், பிரதமர் மோடி மேற்கொண்ட இந்த பிரச்சாரமானது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்திய மக்களுக்கு பிரதமராக இருக்கிறார். ஆனால் அவருக்கு, இந்த பிரதமர் பதவியை தொடர்வதற்கு எந்த விதமான அடிப்படை தார்மீக உரிமையும் இல்லை என்பதை வலியுறுத்துகிறோம்.
ஆகவே, தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும். பிரதமர் மோடியை தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நபர்களுக்கு பாஜக துணை" - கரூர் எம்.பி ஜோதிமணி காட்டம்!