சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று 23 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் கலந்து கொண்டு 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்த விழாவில் முதன்மை விருந்தினராக சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் க.ஜ.ஸ்ரீராம் பங்கேற்றார். மேலும் பல்கலைக்கழக பதிவாளர் பெ.விஸ்வநாதமூர்த்தி, தேர்வாணையர் எஸ்.கதிரவன், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப் பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறைகளில் நடைபெற்று வரும் ஆராய்ச்சிப் பணிகளையும், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத்துறை மாணவ, மாணவியர் உருவாக்கியுள்ள கலைத்திறன் மிக்க ஆடைகளைப் பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, நெசவாளர்களுக்கு உதவிடும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் சங்கத்தினர் கூறுகையில், "பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நிலையில் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக இருந்த பேராசிரியர் தி.பெரியசாமி, வி.ராஜ் ஆகியோர் அண்மையில் சீனியர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றனர்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி எக்ஸிக்யூட்டிவ் எம்பிஏ படிப்பு: விண்ணப்பிக்கத் தயாரா?
பல்கலைக்கழக சாசன விதிகளின் படி பேராசிரியர் நிலையில் இருப்பவர் மட்டுமே அந்த கேடரில் ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்க முடியும். ஆனால் சட்டத்திற்கு புறம்பாக சீனியர் பேராசிரியர் என்ற கேடரில் பதவி உயர்வு பெற்ற அந்த இருவரின் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியும் காலாவதியாகி விட்டது.
ஆனால் சட்டவிதிகளுக்கு மாறாக அவர்கள் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நீட்டிக்க வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் சங்கமும், தொழிலாளர் சங்கமும் இச்சட்ட விதிமீறலைச் சுட்டிக்காட்டிய பின்னரும் துணைவேந்தர் ஜெகநாதன் வேண்டுமென்றே பட்டமளிப்பு விழாவின் பாரம்பரியத்தைக் குலைக்கும் வண்ணம் செயல்பட்டுள்ளார்.
ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நீட்டிக்க தகுதியற்றவர்கள் மேடையில் பட்டம் பெறும் மாணவர்களின் பெயர்களை வாசித்தது பெரும் களங்கமான செயல் ஆகும். சட்டப்படி ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கத் தகுதியற்றவர்களை பட்டமளிப்பு விழா மேடையில் ஏற்றிய துணைவேந்தரின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. இது குறித்து விரைவில் சங்கங்களின் சார்பில் வழக்குத் தொடரப்படும்" என தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.