பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர், எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் - சத்யா தம்பதி. இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். அதில் 13 வயதான சிறுமி எளம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், சிறுமிக்கு பிறந்தது முதலே ஒருவிதத் தோல் நோய் இருந்ததால், கைரேகை இல்லாமல் இருந்துள்ளது.
மேலும் நோயின் தாக்கத்தால் கையில் செதில் செதிலாக இருப்பதால், கைரேகை பதிவு செய்ய முடியவில்லை எனத் தெரிவிக்கின்றனர். அதனால், ஆதார் அட்டை கிடைக்காமல் தவித்த சிறுமிக்கு, அதனைத் தொடர்ந்து எவ்வித அரசு ஆவணங்களும், அடையாள அட்டைகளும் கிடைக்கவில்லை எனவும், இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் துறைசார்ந்த அலுவலர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதனால் நேற்று (திங்கட்கிழமை) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோர், மாவட்ட ஆட்சியர் கற்பகத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவைப் பரிசீலனை செய்த ஆட்சியர் கற்பகம், இதுதொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அலுவலர்களை நேரில் வரவழைத்து, பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் அரங்கிலேயே சிறுமியைப் பரிசோதித்து, அவருக்கு மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை வழங்குமாறு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சிறுமியைப் பரிசோதித்து விசாரணை செய்த சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளும், சுமார் 10 நிமிடத்திற்குள் சிறுமிக்கு 75 சதவீதம் தோல் நோய் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துவிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையையும் அதற்கான சான்றிதழையும் ஆட்சியர் அலுவலகத்திலேயே வழங்கினர்.
மேலும் ரேகையின்றி மாற்று வழி மூலமாக ஆதார் அட்டை பெறுவதற்குரிய உத்தரவுகளையும் ஆட்சியர் கற்பகம் பிறப்பித்தார். இதனால் இனிவரும் காலங்களில் சிறுமிக்கு அரசு நலத்திட்டங்கள் கிடைக்கும் என்றும், ஆட்சியர் 10 நிமிடத்தில் தனது மகளுக்கு சான்றிதழும், மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையும் வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் சிறுமியின் தாய் சத்யா கண்ணீர் மல்க ஆட்சியர் கற்பகம் உள்ளிட்ட அனைத்து அலுவலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு!