ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம் பேருந்து நிலையத்தில் தொடங்கியது. இந்த நடைபயணத்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “குஜராத் மாநிலத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட 12 பேர், மோடி மற்றும் அமித் ஷாவின் பரிந்துரையின் பேரில் விடுவிக்கப்பட்டது மட்டுமின்றி, அவர்களுக்கு மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்கின்றனர்.
பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தவர்களை விடுவிப்பது நியாயமா? இவ்வளவு மோசமாக பாஜக அரசு நடந்து கொண்டுள்ளது. கடந்த தேர்தலில் மோடி எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதோடு மட்டுமல்ல, கொஞ்சம் தவறினால் மரணம் ஏற்பட்டிருக்கும், செத்த பாம்பை போல மோடி உலாவி வருகிறார் என்றார்.
திருப்பதி லட்டு: தொடர்ந்து பேசியவர், திருப்பதி லட்டு விவகாரத்தில் ஒன்றுமே இல்லாத விஷயத்தை பெரிதாக்கி சந்திரபாபு நாயுடு அதில் பிழைப்பை நடத்துகிறார். திருப்பதி லட்டில் கலப்படம் கிடையாது, நீங்கள் அல்வா கொடுக்க பார்க்கிறீர்கள் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். துணை முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர் உதயநிதி ஸ்டாலின். தமிழகம் சிறந்த விளையாட்டு வீரர்களைக் கொண்ட மாநிலம் என்ற அளவிற்கு கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பெண்கள் அனைவரையும் ஊக்குவிக்கின்ற வகையில் விளையாட்டுத் துறையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ஆரம்பம் நன்றாக உள்ளது, உதயநிதி இன்னும் சிறப்பாக செயல்படுவார், செயல்பட வேண்டும் எனக் கூறினார்.
மேலும், எடப்பாடியை பொறுத்தவரை தனியாக கட்சி நடத்த முடியாது. அவர்களை நம்பி ஒட்டுமொத்த தொண்டர்களும் போக மாட்டார்கள், மக்களும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க மாட்டார்கள். வெளியே ஓரிரண்டு பேரை சேர்த்துக்கொண்டால் டெபாசிட் ஆவது வாங்க முடியும் என சூசகமாக தெரிவித்தார்.
விஜய் எட்டாவது அதிசயம்: தொடர்ந்து, உலகின் எட்டாவது அதிசயமாக விஜய் உள்ளார், ஆரம்பிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் கொள்கைகள், கோட்பாடுகள், கொடி, கொடிக்கான அர்த்தம் உண்டு. தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுகம் செய்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், எதற்காக அந்த கொடி என்று அவருக்கும் புரியவில்லை, மக்களுக்கும் புரியவில்லை. எதற்காக யானைகள் இரண்டு காலை தூக்கிக்கொண்டு உள்ளது, சர்க்கஸ் யானையா அல்லது வேறு எதற்காவது தயாராகிக் கொண்டு உள்ளதா? கொள்கை இல்லாமல் கட்சியை ஆரம்பிப்பது என்பது உலகத்தில் விஜய் செய்த சாதனைதான். அவர் கட்சி கொள்கையில் நடிகைகள் 40 வயதிற்கு மேலும் 60 வயது வரை நடிக்கலாம் என்று சொல்லப் போகிறாரா? முதலில் விஜய் தெளிவு பெற வேண்டும், பிறகு மக்களை தெளிவடையச் செய்ய வேண்டும்.
காங்கிரஸில் சேரலாம்: அனைவரும் விரும்புகின்ற ஒரு பிள்ளையாக விஜய் இருக்கும்போது. அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. விஜய் சொல்லுகின்ற கொள்கைகளை நிறைவேற்றுகின்ற கட்சிகளாகத்தான் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளது. அவர் காங்கிரஸில் சேரலாம், திமுகவில், விடுதலை சிறுத்தை கட்சிகளுடன் சேரலாம். சீமானுடன் மட்டும் தயவுசெய்து சேர வேண்டாம் என்றார். விஜய் கட்சி ஆரம்பித்ததனால் யாருக்கும் வாக்கு வங்கி குறைவது அதிகரிப்பதும் கிடையாது. மக்களை மகிழ்விப்பவராகத் தான் விஜய் பார்க்கின்றார்களே தவிர வழிகாட்டுகின்ற ஒரு தலைவனாக மக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறும். சீமானுக்கு அடுத்த இடத்தில் தான் பாஜக வரும் என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்