தூத்துக்குடி: கன்னியாகுமரி - காஷ்மீர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையுடன், தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில் திருநெல்வேலியிலிருந்து - தூத்துக்குடி வரை 47.250 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.349.50 கோடியில் நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையானது, கடந்த 2010ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு 2013ஆம் ஆண்டு முடிக்கப்பட்டு வாகன போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது.
இந்த சாலையில் வல்லநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டது. இதேபோன்று நான்கு வழிச்சாலையின் குறுக்கே உள்ள ஓடை கால்வாய் மீதும் பாலங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அந்தோனியார்புரம் பகுதியில் கோரம்பள்ளம் குளத்துக்குச் செல்லும் நீர்வரத்து கால்வாய்க்கு குறுக்கே பாலம் அமைக்கப்பட்டது.
போக்குவரத்து அதிகம் கொண்ட இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், பேருந்துகள் சென்று வருகின்றன. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதி கனமழையின் காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அந்தோனியார்புரத்தில் நான்கு வழிச்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 2 நாட்களாக சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பின்னர், அந்த பகுதியில் தற்காலிக சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. மேலும், கடந்த வாரம் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கினார்.
இரவில் வேகமாகச் செல்லும் வாகனங்கள் சேதமடைந்து பாலத்துக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. இவ்வாறு இருக்கையில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அங்கு வேகத்தடை மற்றும் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால், வெளியூர்களில் இருந்து வருபவர்கள் அடிக்கடி இந்த சாலை விபத்தில் சிக்கி வருவது வாடிக்கையாகவே உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த பாலத்தை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து வாகன ஓட்டிகள் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்து. இந்நிலையில், ஏழு மாதங்களைக் கடந்த நிலையிலும் இன்னும் பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கவில்லை. பாலத்தை சீரமைக்காமல் இருபுறமும் தற்காலிக சாலை அமைத்து அதன் வழியாகவே ஊர்களுக்குச் சென்று வருகின்றனர்.
மேலும், பொதுமக்கள், வெளியூர் பயணிகள் இரவில் வேகமாக செல்லும்போது சேதமடைந்த பாலத்துக்குள் தவறி விழுந்து வருகின்றனர். எனவே, விரைவாக சேதமடைந்த பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் உள்ள பாலம் மழைநீர் செல்லும் அளவுக்கு போதுமான கொள்ளளவு கொண்டதாக அமைக்கப்படவில்லை.
இதனால் மழை வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறது. தூத்துக்குடியை இணைக்கக்கூடிய இந்த பிரதான சாலையை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும். இந்த பாலம் வழியாகத்தான் அனைத்து உயரதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் சென்று வருகின்றனர். ஆனால், இதுவரை அந்த பாலத்தை யாரும் கண்டு கொள்ளாதது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
தூத்துக்குடியில் 2வது முறையாக கனிமொழி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டும் பாலத்தை சீரமைக்காமல் என்ன செய்கிறார்? நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்னை அல்லது பாஜக அரசை குறை கூறுவதே வேளையாக வைத்திருக்கிறார். ஆனால், தூத்துக்குடி மக்களுக்கு எதுவும் செய்வதில்லை” என குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: தொழிலதிபர் கௌதம் அதானி சென்னை வருகை.. காரணம் என்ன? - GAUTAM ADANI in CHENNAI