திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், சீட்டு நடத்தி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபர், விசாரணையின் போது தப்பியோடியதால் அவரைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜாஜிபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஹரிஹரன். வழக்கறிஞராக உள்ள இவர், கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் மாதச் சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில், திருவள்ளூர், மணவாளநகர் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பின் ஹரிஹரன் தன்னிடம் சீட்டில் சேர்ந்து பணம் செலுத்திய நபர்களுக்கு உரிய முறையில் பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும், பணத்தை திருப்பிக் கேட்டபோது எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டால் பணத்தை தருவதாகக் கூறி அலைக்கழித்து வந்ததாகவும் பாதிக்கப்பட்ட நபர்கள் கூறுகின்றனர்.
இதுபோன்று, அவர் ரூ.40 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்து, திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக நேற்று (அக்.24) திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. அதற்காக பாதிக்கப்பட்ட நபர்களும், மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஹரிஹரனும் வந்திருந்துள்ளனர். இதற்கிடையே, விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, ஹரிஹரன் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்ததால், பாதிக்கப்பட்ட நபர்கள் வெளியே வந்து பார்த்தபோது, அவர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதனால், ஆத்திரமடைந்த நபர்கள் விசாரணையில் போது தப்பிச் சென்ற ஹரிஹரனை மீண்டும் அழைத்து வந்து விசாரணை நடத்தி, தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என கண்டன கோஷங்கள் எழுப்பியும், எஸ்பி அலுவலக வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட நபர்கள், "பாதிக்கப்பட்ட அனைவரும் லட்சக்கணக்கில் பணத்தை சீட்டாகக் கட்டியுள்ளோம். அவர் வழக்கறிஞர் என்பதால் பொறுமையாக இருந்தோம். ஆனால், ஏமாற்றிக் கொண்டே உள்ளார். நியாயம் கிடைக்க வேண்டும் என்றுதான் வந்தோம். பின்னர் பொதுமக்கள் எங்கே செல்வது?" எனத் தெரிவித்தனர்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/25-10-2024/22756729_p.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்