மயிலாடுதுறை: 2004, டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தோறுக்கு 20 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டுகிறது. இந்த துயரமான நாளில் தங்களது குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தமிழக கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து, அவர்களது நினைவிடத்திற்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்வளையம் வைத்தும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமி ஆழிபேரலை தாக்கியது. இதில், தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழிப்பேரலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, தரங்கம்பாடியில் மட்டும் 319 பேர் உயிரிழந்துள்ளனர்.
தர்ப்பணம் கொடுத்து வழிபாடு: அந்த வகையில், மயிலாடுதுறையில் சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தோருக்கு குடும்பத்தினர்கள், அவர்களது நினைவாக தரங்கம்பாடி கடற்கரையில் தர்பணம் கொடுத்து வழிபாடு செய்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். குறிப்பாக தரங்கம்பாடி மீனவ கிராமத்தில், கடற்கரையில் உள்ள மீன் விற்பனை கூடத்தில், உயிரிழந்தவர்களுக்கு அவர்களது குடும்பத்தினர் யாகம் வளர்த்து தர்ப்பணம் கொடுத்து, கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தி வழிபாடு செய்துள்ளனர்.
கண்ணீர் மல்க அஞ்சலி: சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு தரங்கம்பாடியில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை தரங்கம்பாடி மீனவ கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு பேச் அணிந்து மவுன ஊர்வலமாக தரங்கம்பாடி கடை வீதியில் உள்ள நினைவு ஸ்தூபிக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். பின்னர், தரங்கம்பாடி பழைய ரயில் நிலையம் அருகே சுனாமியால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்த இடத்திற்கு சென்று ,மாலை அணிவித்து மலர்வளையம் வைத்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.மயிலாடுதுறை எம்பி சுதா, பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு, சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க: 2004 டிச.26.. கோரத்தாண்டவம் ஆடிய ஆழிப்பேரலை... உறவுகளை கடலுக்கு பறிகொடுத்துவிட்டு இன்றும் தீரா துயரத்தில் வாழும் குமரி மக்கள்!
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சந்திரபாடி, சின்னூர்பேட்டை, சின்னங்குடி, குட்டியாண்டியூர், வெள்ளகோயில், மாணிக்கபங்கு, வானகிரி, கொடியம்பாளையம், திருமுல்லைவாசல், தொடுவாய், மாணிக்கப்பங்கு, பழையாறு, மடவாமேடு, பூம்புகார், உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
ஆளுநர் அஞ்சலி: சென்னை பட்டினம்பாக்கம் நொச்சிகுப்பம் கடற்கரை பகுதிகளில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பாக, சுனாமியால் இன்னுயிர் நீத்த உறவுகளுக்கு சுனாமி 20 ஆம் ஆண்டு நாள் அனுசரிப்பு மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்களுடன் அமைதி பேரணியாக ஊர்வலமாக வந்து சுனாமியில் உயிரிழந்த நபர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும், கடற்கரையில் பால் ஊற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாடு மீனவர் பேரவையின் தலைவர் அன்பழகன் பேசியதாவது, “வயிற்றுப் பிழைப்புக்காக கடலுக்கு செல்லக்கூடிய மீனவர்கள் கொல்லப்படுவதும், சிறைச்சாலை அனுபவிப்பதும், உடைமைகள் பறிமுதல் செய்வதும் தமிழகத்தில் தான் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். மீனவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதில், காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடற்கரை பகுதியில் நடைபெற்ற நினைவு தினத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார். தொடர்ந்து, மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் மலர்வளையம் ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதில், 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உயிர் நீத்த சொந்தங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.