தஞ்சாவூர்: தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி தகோயில், தஞ்சையை ஆண்ட ரெகுநாத நாயக்க மன்னரால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்ட மிகப் பழமையான வைணவத் கோயிலாகும். இங்கு மூலவர் இராமபிரான் பட்டாபிஷேக கோலத்தில் சீதா தேவியுடன் காட்சியளிக்கிறார்.
இராமபிரான் சீதாதேவியுடன் அமர்ந்திருக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, லட்சுமணன் தன்னுடைய மற்றும் அண்ணன் இராமனுடைய வில்லினையும் ஏந்தியிருக்க, பரதன் குடை சமர்ப்பிக்க, வேறு எங்கும் காண முடியாத வகையில் அனுமன் ஒரு கையில் வீணையும், மறு கையில் இராமாயண சுவடியும் ஏந்திய படி காட்சியளிக்கிறார். மேலும் இக்கோயிலின் உட்பிரகாரத்தினை மும்முறை வலம் வந்தால் இராமாயண கதையினை காட்சி வடிவில் வண்ண வண்ண ஓவியமாக காணலாம்.
இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில், ஆண்டுதோறும் ராமநவமி விழா 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு ராமநவமி விழா கடந்த 9 ஆம் தேதி செவ்வாய்கிழமை கருடாழ்வார் உருவம் பொறிக்கபட்ட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றி வைக்க, ராமநவமி விழா தொடங்கியது. அதனையடுத்து, நாள்தோறும் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழாவின் 9ம் நாளான இன்று ராமநவமியை முன்னிட்டு, நாதஸ்வர மேள தாளம் முழங்க, சீதாதேவி, இராமபிரான் மற்றும் லட்சுமணர் ஆகியோர் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருள, தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு “ராம் ராம் சீதா ராம், கோசலராம், அயோத்தி ராம்” என முழங்கியவாறு தேரினை வடம் பிடித்து இழுத்தும், தேரில் உலா வந்த சுவாமிகளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.
இத்தேர் இராமசாமி கோயில் சன்னதி, பூக்கடைத்தெரு, பெரிய கடைவீதி, சாரங்கபாணி கீழ வீதி, சாரங்கபாணி தெற்கு வீதி வழியாக மீண்டும் இராமசாமி கோயில் நிலையடியை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று இரவு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இறுதியாக, வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடையாற்றி உற்சவத்தில், இராமபிரானும், சீதா தேவியும் திருக்கல்யாண சேவையில், புஷ்பக விமானத்தில் புறப்பாடும் நடைபெற்று, இவ்வாண்டிற்காண ராமநவமி பெருவிழா நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் நூதன முறையில் வாக்கு சேகரித்த திமுக, பாஜக வேட்பாளர்கள்! - Lok Sabha Election 2024