தேனி: பெரியகுளம் நகராட்சியின் மாதாந்திர நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் சுமிதா தலைமையில், கூட்ட அரங்கில் நேற்று (மார்ச் 14) நடைபெற்றது. இக்கூட்டத்தில், 57 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு விவாதம் நடைபெற்றது.
இதில் பெரியகுளம் நகராட்சியின் இரண்டாவது வார்டு உறுப்பினர் பால்பாண்டி பேசுகையில், “பெரியகுளம் நகராட்சியின் பேருந்து நிலையம், ரூ.1 கோடி 28 லட்சத்தில் மறு சீரமைப்பு பணிகள் முடிவுற்று, கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், பெரியகுளம் நகராட்சி பேருந்து நிலையத்திற்கு, பகல் நேரங்களில் திருச்சி, சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பெரும்பாலான வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் என 70 சதவீதம் பேருந்துகள் வருவதில்லை. இதனால், பேருந்து நிலையத்தில் கடை நடத்தும் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
பெரியகுளம் பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளையும் வரவழைக்க ஏன் முடியவில்லை, பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வரவழைப்பதற்கு போக்குவரத்து துறை மற்றும் முதலமைச்சருக்கு புகார் அனுப்ப வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். மேலும், இதற்காக நகர் மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். உண்ணாவிரத போராட்டம் நடத்த நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா? தேதியை குறியுங்கள் நகர் மன்ற தலைவர் உட்பட அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கேள்வி எழுப்பினார்.
பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் வராதது குறித்து தொடர்ந்து நகர்மன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நகர் மன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: “ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன்?” - பிரதமரை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!