திருச்சி: ஜனவரி 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதில் பங்கேற்பதற்கு முன்பாக, பிரதமர் மோடி பல்வேறு பகுதிகளில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில், தமிழகத்தில் ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய கோயில்ளுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
முன்னதாக, நேற்று சென்னையில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்ற பிறகு, ஆளுநர் மாளிகையில் தங்கினார். பின்னர், அங்கிருந்து இன்று காலை 10.30 மணி அளவில், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பின்னர், திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வந்த பிரதமர் மோடி, யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் பஞ்சக்கரை பகுதியில் உள்ள திடலில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் தரை இறங்கினார்.
இந்நிலையில், ரங்கநாத பாதுகா வித்யாலயா அறக்கட்டளை சார்பில், பிரதமரை வரவேற்கும் விதமாக ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி உள்ள சாலைகளில் "பாரத பிரதமர் ராஜா நரேந்திர மோடி மகா ராஜா வரவு நல்வரவு ஆகுக" வாசகங்கள் இந்தி மொழியில் எழுதி பிரதமர் மோடியை வரவேற்றுள்ளனர். இது குறித்த விளக்கத்தை, ரங்கநாத பாதுகா அறக்கட்டளையின் உயர் ஆலோசகர் செல்லம் சீனிவாசன் சோமயாஜி கூறினார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, கோயில் வளாகம் மட்டுமின்றி, கோயிலைச் சுற்றி உள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இன்று பிற்பகல் 2.30 மணி வரை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பொது தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருவதை முன்னிட்டு, இன்று அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் சாலை, ஆகிய சாலைகாளில் இருந்து வரும் வாகனங்கள், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.
மேலும், பிரதமரை வரவேற்க ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீதர் ஸ்தோத்திர பாடல் குழுவின் மகளிர் அணியினர், ஹேமா ஸ்ரீதரன் தலைமையில், "பச்சைமாமலை போல்.." என்ற பிரபந்த பாசுரம், ஆண்டாள் பற்றிய கும்மி ஆட்டம், கோலாட்டம் உள்ள கலை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து தமிழகத்தைப் புகழும் பிரதமர் மோடி.. தமிழகத்தில் வாக்கு வங்கி உயருமா?