ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், ஆலப்பாக்கத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாகக் குடிநீர் முறையாக வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களைக் கொண்டு அரசு பேருந்தை வழி மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முறையான குடிநீர் விநியோகம் நடைபெறுவதில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் முறையிட்டும், இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பொன்னப்பந்தாங்கல் - பனப்பாக்கம் செல்லும் சாலையில், பஞ்சாயத்து நிர்வாகத்தைக் கண்டித்து காலி குடங்களைக் கொண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை வழி மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பஞ்சாயத்து நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போராட்டத்தைக் கைவிட்டு அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து, பேருந்து அப்பகுதியில் இருந்து புறப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஐ.ஏ.எஸ் ஆவதே எனது லட்சியம்.. 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற திருநெல்வேலி மாணவி! - 10th Result In Tamil Nadu