திருநெல்வேலி : தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தி ஆகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் தாமிரபரணி ஆறு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி விருதுநகர், கன்னியாகுமரி என ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவையாக விளங்கி வருகிறது.
ஆண்டு முழுவதும் வற்றாமல் தண்ணீர் செல்வது தான் தாமிரபரணி ஆற்றின் சிறப்பாகும். இந்நிலையில் சமீப காலமாக தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது அதிகரித்துள்ளது. வீடுகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் தொழிற்சாலைகள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் விடப்படுவதால் தாமிரபரணி தண்ணீர் குடிப்பதற்கு, குளிப்பதற்கு உகந்ததாக இல்லை என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வர்கள் பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் தொடுத்த வழக்கில் ஒரு சொட்டு கழிவுநீர் கூட தாமிரபரணி ஆற்றில் கலக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் ஆற்றின் தற்போதைய நிலை என்ன என்பதை குறித்து அறிந்து கொள்ள தாங்களே நேரடியாக ஆய்வு செய்ய இருப்பதாக நிதி உதவிகள் புகழேந்தி, சாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்திருந்தது.
அதன்படி, தாமிரபரணி ஆற்றில் இன்று காலை முதல் நீதிபதிகள் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து ராமையன்பட்டியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையத்தை நீதிபதிகள் நேரடியாக ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது அங்கே கழிவுநீர் முறையாக சுத்தரிக்கப்படாமல் குளங்களில் கலக்கப்படுவது தெரியவந்தது. மேலும், சரியான திட்டமிடல் இல்லாமல் இருப்பதால், பயங்கர துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் நீதிபதிகளிடம் முறையிட்டனர்.
இதையும் படிங்க : பக்கத்து வீட்டு நாயை கடித்து குதறிய பிட்புல் ரக நாய்! பொதுமக்கள் அச்சம்
இதையடுத்து கழிவுநீர் உள்ளே வருடம் இடம் மற்றும் சுத்தரிக்கப்பட்ட பிறகு வெளியேக் கொண்டு செல்லப்படும் இடம் ஆகியவற்றை நீதிபதிகள் நேரடியாக ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு ஆய்வை முடித்துக் கொண்டு நீதிபதிகள் திரும்பியபோது அருகில் உள்ள அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்த மக்கள் நீதிபதிகள் காரை மறித்து அவர்களிடம் மனு ஒன்று வழங்கினர்.
அதில், "அருகில் இருக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் சரிவர கழிவுநீர் சுத்திகரிக்கப்படாததால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. எங்களால் இங்கு வசிக்க முடியவில்லை. எனவே, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட நீதிபதிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் கலையரசி கூறுகையில், "எங்கள் பகுதியில் குப்பைகள் கூட சரியாக அள்ளுவது இல்லை. தினமும் குப்பைகள் சேர்ந்து கிடக்கும். இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் வழி புதர்மண்டி போய் உள்ளது.தற்போது நீதிபதிகள் வருவதால் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவசர, அவசரமாக மாநகராட்சியினர் இந்த இடத்தை சுத்தம் செய்தனர். அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இருப்பதால் பயங்கர துர்நாற்றம் ஏற்படுகிறது. எங்கள் பகுதியில் போர்வெல் போட்டால் சுகாதாரமற்ற தண்ணீர் தான் வருகிறது.
ஒன்றுக்கு மூன்று முறை போர் போட்டாலும் மோசமான நீர் தான் வருகிறது. எங்களால் இங்கு வசிக்க முடியவில்லை. தினம், தினம் சாக்கடை நாத்தத்தில் தான் வசித்து வருகிறோம். குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தனர்.