சென்னை: இந்திய சினிமாவில் இயக்குநராகவும், ஒளிப்பதிவாளராகவும் வலம் வருபவர், பி.சி.ஸ்ரீராம். இவர் வா இந்த பக்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி, தனது பயணத்தைத் தொடங்கினார்.
அதன்பின், மணி ரத்னம் இயக்கத்தில் மெளனராகம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கடந்த 1995ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த குருதிப்புனல் படத்தினை பி.சி.ஸ்ரீராம் இயக்கினார். இந்தப் படம் அனைவராலும் பெரிதும் பேசப்பட்டது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதையும் நாயகன் படத்திற்காக அவர் பெற்றார்.
இந்நிலையில், நேற்று (பிப்.12) தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் ஆளுநர் தனது உரையை சில நிமிடங்களில் முடித்து விட்டு, தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னால் வெளியேறிச் சென்றார். இது குறித்து, பி.சி.ஸ்ரீராம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் ஏற்கத்தக்கது அல்ல எனவும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் எனவும், இந்த பதிவிற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் நேற்று (பிப்.12) காலை 10 மணிக்குத் தொடங்கியது. தமிழில் தனது உரையை வாசிக்கத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தைத் தொடக்கத்திலும், இறுதியிலும் வாசிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, 'வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய் பாரத்' எனக் கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.
தமிழ்நாடு அரசின் உரையில் உள்ள பல ஏற்புடையதாக இல்லை என்று தமிழ்நாடு அரசின் உரையை அவர் புறக்கணித்தார். அதன்பின், ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழிலும், ஆங்கிலத்திலும் மன்றத்தில் அரசு தயாரித்த உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம் பெற வேண்டும் எனத் தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் பேரவையில் முன்மொழிந்தார்.
அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பின் அடிப்படையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.. இன்று ஆளுநர் உரை மீதான விவாதம்!