கிருஷ்ணகிரி: ஒசூர் அரசு தலைமை மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இந்த பிரச்னையைப் போக்க, நேற்று மாலை மருத்துவமனை வளாகத்தில் ஆழ்துளைக் கிணறு (போர்வெல்) அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
மேலும், எந்தவித பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல் இந்த பணி நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், மருத்துவமனை வளாகம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. நோயாளிகளின் உடைகள், உடைமைகள், படுக்கைகள் தூசி மண்டியாக காட்சியளித்தது. குறிப்பாக, இந்த பணிகள் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: சென்னை எம்ஐடி-க்கு வெடிகுண்டு மிரட்டல்.. அடுத்தடுத்து வரும் மிரட்டல்களால் பொதுமக்கள் அச்சம்!
சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களாக இருக்கக் கூடியவர்கள் என பலர் அவதி அடைந்தனர். இது குறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறும்போது, "மருத்துவமனையில் தண்ணீர் பிரச்னையைப் போக்க ஆழ்துளைக்கிணறு அமைப்பது நல்லதுதான். ஆனால் எந்த ஒரு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் இல்லாமல் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.
நோயளிகள் தங்கி உள்ள அறைகளில் உள்ள ஜன்னல்கள், மணல் புழுதி நுழையாத வகையில் தார்ப்பாய் போட்டு மூடிவிட்டாவது, ஆழ்துளைக்கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டு இருக்கலாம். மண் புழுதி பறக்காமல் இருக்க போர் போடும்போது அவ்வப்போது தண்ணீர் ஊற்ற வேண்டும், அதுவும் செய்யவில்லை" என தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலை துவங்கப்பட்ட இந்த பணிகள் இன்று வரையிலும் தொடர்ந்து நடைபெற்று வருவதால், வளாகத்தில் இருக்கும் மணல் புழுதி அடர்த்தி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேலும், இந்த இயந்திரம் ஏற்படுத்தும் சத்தமும், போர் போடும்போது வெளிவரும் மணல் புழுதியும், ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் அடுத்தடுத்து குழந்தைகள் கடத்தல் என தாக்குதல்.. வதந்திகளை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை!